Sunday, December 9, 2007

முதற் காதல்
- வ.ஐ.ச.ஜெயபாலன்

வாடைக் காற்று
பசும்புல் நுனிகளில்
பனிமுட்டை இடும் அதிகாலைகளில்
என் இதயம் நிறைந்து கனக்கும்.

அன்னையின் முலைக்காம்பையும்
பால்ய சகியின் மென் விரல்களையும்
பற்றிக் கொண்ட கணங்களிலேயே
மனித நேயம்
என்மீதிறங்கியது.

நான் இரண்டு தேவதைகளால்
ஆசீர்வதிக்கப் பட்டவன்.

"பால்ய சகியைப் பற்றி
உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே"
என்று கேட்பான் எனது நண்பன்.

குரங்கு பற்றிய பூமாலைகளாய்
நட்பை
காதலை
புணர்ச்சியை
குதறிக் குழப்பும்
தமிழ் ஆண் பயலிடம்
எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை.

கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும்
சந்தேகம் கொள்ளுதல்
சாலும் தெரியுமா?

அடுத்த வீட்டு வானொலியை
அணைக்கச் சொல்லுங்கள்
பஸ் வரும் வீதியில்
தடைகளைப் போடுங்கள்
இந்த நாளை
எனக்குத் தாருங்கள்.

என் பாதித் தலையணையில்
படுத்துறங்கும் பூங்காற்றாய்
என் முதற் காதலி
உடனிருக்கின்ற காலைப் பொழுதில்
தயவு செய்து
என்னைக் கைவிட்டு விடுங்கள்.

தேனீரோடு கதவைத் தட்டாதே
நண்பனே.

எனது கேசத்தின் கருமையைத் திருடும்
காலனை எனது
இதயத்துக்குள் நுழையவிடாது துரத்துமென்
இனிய சகியைப் பாடவிடுங்கள்
அவளை வாழ்த்தியோர் பாடல் நான்
இசைப்பேன்.

காடுகள் வேலி போட்ட
நெல் வயல்களிலே
புள்ளி மான்களைத் துரத்தும் சிறுவர்கள்
மயில் இறகுகளைச் சேகரிக்கும்
ஈழத்து வன்னிக் கிராம மொன்றில்
மனித நேயத்தின் ஊற்றிடமான
பொன் முலைக் காம்பை
கணவனும் குழந்தையும்
கவ்விட வாழும்
என் பால்ய சகியை வாழ்த்துக!

என் முதற் காதலின் தேவதைக் குஞ்சே!
இனிமை
உன் வாழ்வில் நிறைக.
அச்சமும் மரணமும்
உனை அணுகற்க.

ரைபிள்களோடு காவல் தெய்வமாய்
உனது
ஊரகக் காடுக்குள் நடக்குமென் தோழர்கள்
மீண்டும் மீண்டும்
வெற்றிகள் பெறுக.

ஒருநாள் அவருடன் நானும் சேர்ந்து
உனது கிராமத்து
வீதியில் வரலாம்
தண்ணீர் அருந்த உன் வீட்டின் கடப்பை
அவர்கள் திறந்தால்
எத்தனை அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டும்.

நடை வரப்பில்
நாளையோர் பொழுதில்
என்னை நீ காணலாம் .....
யார் மீதும் குற்றமில்லை.
என்ன நீ பேசுதல் கூடும்?
நலமா திருமண மாயிற்றா?
என்ன நான் சொல்வேன்?

புலப்படாத ஒரு துளி கண்ணீர்
கண்ணீர் மறைக்க
ஒரு சிறு புன்னகை
ஆலாய்த் தழைத்து
அறுகாக வேர் பரப்பி
மூங்கிலாய்த் தோப்பாகி
வாழ வேண்டும் எந்தன் கண்ணே.

1985

No comments: