Sunday, November 4, 2007

அஞ்சலிப் பரணி

அஞ்சலிப் பரணி
- வ.ஐ.ச.ஜெயபாலன்

எவர்க்கும் பணியா வன்னி
பிள்ளைகளைப் பறிகொடுத்து
விம்மி அழுகிறது.
எதிரிகள் அறிக
எங்கள் யானைக் காடு சிந்துவது
கண்ணீர் அல்ல மதநீர்.

விழு ஞாயிறாய்
பண்டார வன்னியனும் தோழர்களும்
கற்சிலை மடுவில் சிந்திய குருதி
செங்காந்தள் மலராய் உயிர்த் தெளுகிற மண்ணில்
எங்கள் விடிவெள்ளிப் புன்னகையை
புதைத்து வருகின்றோம்.
புலருகிற ஈழத்தின்
போர்ப்பரணி பாடுதற்க்கு.

எங்கள் மூன்று அம்மன்களும்
பதினெட்டுக் காதவராயன்களும்
முனியப்பர்களும் எங்கே ?
அசுரப்பறவைகளின் சிறகில் வருவதாய்
வாகைகள் பூத்துக் காத்திருந்தேனே என
வன்னிக் காடு வாய்விட்டு அரற்றுது.

போராளிகளுக்காக
தேன் வாசனையை
வாகை மலர் அரும்புகளில்
பொதிந்து காத்திருக்கும்
வன்னிகாடே வன்னிக் காடே
உன்மனதைத் தேற்றிக்கொள்.
உன் புன்னகை மன்னன்
பாண்டவருடன் களபலியானான்.

அவன்தான் தாயே
பலதடவை
காலனை வென்று ஞாலப் பந்தில்
புலிச்சினை பொறித்த உன் தவப் புதல்வன்.
நாம் கலங்குவதை அவன் விரும்பான்

தன் உயிரிலும் தாங்கிய கொடியை
ஐநாவில் ஏற்றுக எனப் பணித்தே அவன் போனான்

visjayapalan@gmail.com